டிசம்பர் 31, 2021.
சென்னைக்கு புறநகரத்தில் உள்ள அந்த பழைய அபார்மெண்டில் புது வருடத்திற்கான கொண்டாட்டம் முந்தைய நாள் இரவிலிருந்தே ஆரம்பித்து கலை கட்டியிருந்தது. அந்த அபார்மெண்டில் இருந்த பூங்காவில் ஒரு மேடை அமைத்து அதில் ஆங்காங்கே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான நபர்கள் அவர்களின் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்..
அந்த பூங்காவில் இருந்த மரத்திற்கு பக்கத்தில் குடும்பம் குடும்பமாக இல்லை என்றால் கணவன் மனைவியாக சேர்ந்திருந்து இன்னும் சிறிது நேரத்தில் வர போகும் புத்தாண்டை வரவேற்க ஆர்வமாக காத்திருந்தனர்.
அதில் என்னை போன்ற தனிநபராக யாரும் இருக்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றியது. அதனாலே அவர்களுக்கு மத்தியில் நிற்காமல் தனியாக ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.. ஓரமாக ஒதுங்கி நிற்கும் என்னை பற்றிய சில வரிகள்..
நான் வெங்கடேசன். வயது 50. இன்னும் சர்வீஸ் இருந்தாலும் என்னுடைய குடும்ப கடமைகளை நிறைவேற்றியதால் வாலன்டியராக ரிட்டர்மெண்ட் வாங்கிட்டு வந்து இந்த அபார்மெண்டில் குடியேறிக்கிறேன். என்னுடைய மனைவி என்னுடைய மகள் சிறுவயதாக இருக்கும் போது நெஞ்சு வலியிலால் அந்த புண்ணியவதி மேலே போய் சேர்ந்துவிட்டாள்.
எனக்கு இருந்த ஒரு பெண்ணை நன்றாக படிக்க வைத்ததால் அவளுக்கும் அமெரிக்காவில் வேலை கிடைக்க அவளுடைய வாழ்க்கையும் அங்கே அவளாகவே அமைத்துக் கொண்டாள். என்னையும் அவளுடனே வந்து தங்கி கொள்ள சொன்னாள்.
ஆர்மியில் இருந்ததால் நாட்டுப்பற்று அதிகமாகவே இருந்தது. அதனால் அமெரிக்காவிற்கு வர மறுத்துவிட்டேன் என்பதால் இந்த அபார்மெண்டில் இருந்த பணத்தில் எனக்காக மட்டும் ஒரு பிளாட்டை வாங்கி குடியேறி இருக்கிறேன்..
இதோ புத்தாண்டிற்கான நிகழ்ச்சிகள் துவங்க ஆரம்பித்துவிட்டது.. எல்லோரும் ஆர்வமாக இன்னும் 30நிமிடத்தில் பிறக்க போகும் புத்தாண்டை வரவேற்க காத்திருந்தனர். எல்லோருடைய கையிலும் மதுபானங்க பாட்டில்கள் இருந்தன..
அதில் இருந்த சில பெண்களின் கையில் இந்த பாட்டில்கள் இருந்ததை பார்க்க முடிந்தது. அதை பார்க்கும் போது காலத்தின் வளர்ச்சி பரிமாற்றம், நாங்களும் எங்களை ஆட்டி படைக்க நினைக்கின்ற ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லாமல் சமமானவர்கள் தான் என்பதை காட்டுவதாக தெரிந்தது..
அங்கிருந்த ஆண்களும் பெண்களும் பிறக்க போகும் புத்தாண்டு மகிழ்ச்சியில் ஸ்பீக்கரில் ஒலிக்கின்ற பாடல்களுக்கு ஏற்ப நடனம் என்ற பெயரில் குதித்து குதித்து எதையோ செய்துக் கொண்டிருந்தனர்..
இதையெல்லாம் ஒரு ஓரமாக இருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.. என்னை தவிர எல்லோரும் மிக சந்தோஷமாக இருந்தனர். எனக்கு மட்டும் தான் இந்த புத்தாண்டு ஒரு வெறுமை, தனிமையை தர போகின்றது என்ற விரக்தியில் உட்கார்ந்திருந்தேன்.
ஆர்மியில் இருக்கும் போது என் மகளை பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். கடைசி காலத்திலாவது அவளுடன் சேர்ந்து என் வாழ்நாட்களை கழிக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் நான் ஒன்று நினைக்க விதி ஒன்று நினைத்து வைத்திருக்கிறது..
அதனால் தான் என்னவோ இன்னும் சில நிமிடங்களில் பிறக்க போகும் புத்தாண்டில் இருந்து மீண்டும் குடும்பங்கள் அற்ற ஒரு தனிமையான வாழ்க்கையை வாழ வேண்டும் என விதி நினைத்து குடுத்திருக்கிறது. இதற்கு விதியை மட்டும் காரணம் சொல்ல முடியாது.
நான் சுட்டு இறந்த எதிரி நாட்டின் மனிதர்களின் சாபமாக கூட இருக்கலாம் என நானே எனக்குள்ளே நினைத்துக் கொண்டிருந்தேன்.
அந்த ஸ்டோன் பெஞ்சில் உட்கார்ந்தபடி மற்றவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.. இதுமாதிரியான சந்தோஷங்கள் எல்லாம் என் வாழ்நாளில் இருப்பதைந்து வருடங்களுக்கு முன்பு அனுபவித்தது.. அதுவும் என் கிராமத்தில் இருந்த போது அனுபவித்தது தான்.
அதன் பிறகு இது மாதிரியான சம்பவங்களை பார்க்கும் வாய்ப்பு கூட இப்போது தான் கிடைத்திருக்கிறது. ஆர்மியில் இருக்கும் போது ஒவ்வொரு புதுவருடம் பிறக்கும் போதும் இந்த ஆண்டாவது நாடும் நாட்டு மக்கள் அமைதியாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் தீர்மானம் எடுப்போம்..
எந்த ஒரு ராணுவ வீரனும் அவரவர் சொந்த குடும்ப வாழ்க்கையில் இனியாவது இப்படி இருக்க வேண்டும் என எப்போதும் பணியில் இருக்கும் போது தீர்மானம் எடுத்தது கிடையாது..
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகாவது குடும்பத்துடன் வாழ நினைத்த எனக்கு கடைசியில் கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான். அந்த விரக்தியில் அமைதியாக உட்காந்திருக்க கூட்டத்தில் இருந்த அனைவரும் இன்னும் பத்து நிமிடத்தில் பிறக்க இருக்கும் புதுவருடத்தை வரவேற்க அவரவருக்கு ஏற்ற வகையில் தயாராகி கொண்டிருந்தனர்..
எனக்கு இந்த புதுவருடம் எப்படி இருக்க போகின்றது. இனி வருகின்ற நாட்களை எப்படி கடந்து செல்ல போகிறேன் என எதுவும் தெரியாமல், புரியாமல் ஒருவித விரக்தி கலந்த குழப்பத்தில் சந்தோஷமாக இருக்கும் மனிதர்களை பார்க்கும் போது எனக்குள்ளும் சற்று பொறாமை எட்டி பார்த்தது.
இங்கு இது மாதிரியான மனிதர்கள் சந்தோஷமாக இருக்க அங்கு பார்டரில் நான் குடும்பத்தை வருட கணக்கில் பிரிந்து, சந்தோஷத்தை இழந்து, வருட கணக்கில் பாதுக்காப்பு கொடுத்திருக்கிறோம்.. ஆனால் இன்று எனக்கு எனக்கான வாழ்க்கையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், பிடிப்பும் இல்லாமல் உடம்பில் உயிர் மட்டும் இருப்பதால் இங்கு வந்து உட்காந்திருக்கிறேன்..
இனி வரும் வாழ்நாட்களில் எனக்கான பணி, சந்தோஷம் எதுவென்று தெரியவில்லை.. ஒருவேளை அதையும் தனிமையை தீர்மானித்த விதியே கூட தீர்மார்த்து இருக்குமோ என்ற கேள்வி மனதிற்குள் எழத் தான் செய்தது. ஆனால் மனத்திற்குள் கேள்வி மட்டுமே இருந்தது. பதில் இல்லை.
பதிலை அந்த விதியே வந்து சொல்லுமா என்ற சந்தேகம் கூடவே இருந்தது. அப்படி ஒருவேளை விதியே வந்து ஏதாவது ஒருவகையில் சொன்னாலும் எப்போது சொல்லும்? இந்த நிமிடமா? அல்லது இந்த இரவா? அடுத்து வரும் பகலா? அடுத்தடுத்த நாட்களா? மாதமா? என எதுவும் தெரியாமல் பெரிய குழப்பத்துடன் அமைதியாக இருக்க புத்தாண்டிற்கான கவுன்டன் பத்திலிருந்து ஆரம்பித்து ஒன்று ஒன்றாக குறைந்து கொண்டே வந்தது..
எனக்கு முன்னால் இருப்பவர்கள் எல்லாம் மிகவும் ஆர்வமாக எண்ணிக்கையை தன் குரலால் பலத்த கரகோஷத்துடன் சொல்லி கொண்டிருந்தனர்..
அந்த கூட்டத்தில் இருப்பவர்களில் நான் மட்டும் தான் அந்த புத்தாண்டை வரவேற்காமல் வரவேற்க பிடிக்காமல் உட்கார்ந்து கொண்டு அவர்களை விரக்தியுடன் வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.. இதோ பைவ், ஃபோர், திரி, டு, ஒன் “விஸ் யூ ஹேப்பி நியூ இயர்” எல்லாரும் சந்தோஷமாக இந்த வருட புத்தம் புது வருடத்தை வரவேற்றனர்.
ஆங்காங்கே காதை கிழிக்கும் அளவிற்கு வெடி சத்தம் விடாமல் கேட்டு கொண்டே இருந்தது. அங்கு தெரிந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி தங்களின் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
அந்த இடமே அடுத்த பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு வெறும் வெடி சத்தமும், கை குலுக்கு வாழ்த்து தெரிவிப்பதுமாக இருந்தது.. புத்தாண்டை வரவேற்ற மனிதர்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி அவர்களின் மகிழ்ச்சியிலிருந்து வெளியேறி அவரவர் ப்ளாட்டுக்கு செல்ல ஆரம்பித்தனர்..
எனக்கு எதிரே என்னை போன்ற ஒரு பெண்மணி எந்தவித மகிழ்ச்சியும் இல்லாமல் தனியாக அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்திருப்பதை பார்க்கும் போது ஒரு பக்கம் சந்தோஷமாகவும், மறுபக்கம் கொஞ்சம் ஆச்சரியமாகவும் தான் இருந்தது.
பொதுவாக என்னை போன்று தனியாக விரக்தியில் உட்காந்திருக்கும் மனிதர்களுக்கு தன்னை போன்று இருக்கும் மனிதர்களை தன்னையும் அறியாமல் அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும். அது மாதிரி தான் அந்த பெண்மணி பார்த்த எனக்குள்ளும் அந்த ஆர்வம் வந்து தொற்றிக் கொண்டது.
அந்த அபார்மெண்டில் நடுதர அந்தஸ்லிருந்து அதிக செல்வ செழிப்புடன் இருப்பவர்கள் வரை இருக்ககூடியவர்கள்.. இதில் யாரும் என்னை போன்று வாழ்கையை வெறுத்து வாழக்கூடிய மனிதர்களாக இருந்தாலும் இங்கே வந்து தனியாக உட்கார வேண்டிய அவசியம் இல்லையே? எதற்காக இங்கே உட்காந்திருக்க வேண்டும்? என பல கேள்விகள் எனக்குள் அடுத்தடுத்து எழுந்து கொண்டே இருந்தது.
அவர்களை பார்த்து பேசுவமா? என்ற நினைப்பு கூட இருந்தது. ஆனால் இன்னும் கூட்டம் முழுவதும் கலைந்து சென்ற பாடில்லை. ஆங்காங்கே மனிதர்கள் நின்று சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் கடந்து போய் பேசினாலும் அந்த பெண் யாரென்று கூட தெரியாது.
தெரியாத பெண்ணிடம் இந்த இரவில் தனியாக இருக்கும் போது பேசுவது நாகரிமாக இருக்காது என்றாலும் அந்த பெண் யார்.? ஏன் இப்படி தனியாக வெறிக்க வெறிக்க உட்காந்திருக்க வேண்டும்? அவள் வாழ்க்கையில் எதுவும் சோகமாக நடந்திருக்கிறதா? என அந்த பெண்ணை பற்றிய அடுக்கடுக்கான கேள்விகள் மனதிற்குள்ளே வந்து எழுந்துக் கொண்டே இருந்தன.
ஆனால் இந்த பெண்ணால் தான் என் வாழ்க்கை மாற போகின்றது என அப்போதைக்கு தெரியாது.. அந்த பெண் குளிர்க்காக தலையை சேலை வைத்து மறைத்து அதே கையில் பிடித்திருந்தாள்.
மார்கழி மாத இரவில் குளிமையில் பலமான பனிக்காற்று வீச அந்த பெண்மணியின் முகத்தை மறைத்திருந்த சேலையை காற்றினால் கொஞ்சம் விலக அந்த பெண்ணை முகம் இருவினாடி மட்டுமே தெரிந்தது. இரு வினாடிகள் மட்டும் தெரிந்தாலும் அந்த பெண்மணியை கூர்ந்து கவனித்து பார்த்த போது ஏற்கெனவே பார்த்து பழகிய முகமாக தான் தெரிந்தது.
ஆனால் முகம் சரியாக தெரியாததால் யாரென்று தெரியவில்லை. அவ்வப்போது அடித்த சிறுசிறு தென்றல் பனிக்காற்றில் அவளின் முந்தானை தலைப்பு விலகி விலகி மறைந்தது. ஒவ்வொரு முறையும் விலகி மறையும் போதெல்லாம் அவளின் முகம் முழுமையாக தெரிந்துவிடாதா? என்ற ஏக்கம் இந்த வயதிலும் இருக்கத்தான் செய்தது.
புத்தாண்டு கூட்டத்திற்கு வந்திருந்த குடும்பங்களில் இருந்து இன்னும் சில குடும்பங்கள் கலைந்து வீட்டிற்கு செல்ல ஆரம்பித்திருந்தனர். இப்போதாவது அந்த பெண்மணி யார் என்று பக்கத்தில் போய் பார்க்கலாமா என்ற எண்ணம் வந்தது. பக்கத்தில் போய் நின்று பார்த்தால் தவறாக எடுத்துக் கொண்டால் இங்கு நமக்கென்று கூட இருந்து சப்போர்ட் செய்ய கூட ஆட்கள் இல்லை.
வாழ்க்கையை உயிர் இருக்கும் வரை கழிக்க வந்த இடத்தில் தேவையில்லாமல் அசிங்கம் ஏதாவது நடந்தால் என்ன செய்வதென்று ஒரு சிறு பயமும் இருந்தது.
எதிரியுடன் சண்டை போடும் போது கூட இது மாதிரியான பயம் வந்ததில்லை. ஆனால் இது மாதிரி நகர்புறங்களில் வாழ்க்கை வாழ வேண்டும் என நினைக்கும் போதே அந்த சிறு பயமும் என்னையும் அறியாமல் வந்து விடுகிறது. இப்போது என்ன செய்யலாம் என யோசித்து கொண்டே அந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்திருந்தேன்.
அந்த பெண்மணி நான் இருக்கும் திசையை நோக்கி ஏதாவது திரும்பினால் முகத்தையாவது பார்க்கலாம். அந்த பெண்மணி எனக்கு தெரிந்த நபராக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நட்பாசையும் கூடவே இருந்தது. குறைந்தபட்சம் அந்த பெண்ணின் முகத்தை பார்க்க வேண்டும் என்றால் கூட அந்த பெண்மணி மனது வைத்தால் தான் முடியும் என்ற கட்டாயத்தில் அப்போதைக்கான சூழ்நிலையை இருந்தது.
அந்த பெண் அங்கே உட்காந்திருப்பது தனிமையை போக்க இல்லை என்பது இந்த முறை உற்று பார்க்கும் போது தான் புரிந்தது. அவள் அந்த ஸ்டோன் பெஞ்சில் உட்காந்து யாரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தது.
அது அவளுடைய கணவனாக இல்லை மகன், மகளாக கூட இருக்கலாம். ஆனால் அப்படி யாராக இருந்தாலும் இந்த அபார்மெண்டை விட்டு வெளியே யாரும் செல்வது போல் தெரியவில்லை. அப்படி இருக்கும் போது ஏன் இவள் இந்த இரவில் பனிப்பொழிவில் முக்காட்டு போட்டுக் கொண்டு உட்காந்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் மனதுக்குள் எழுந்தது.
அந்த பெண்மணி தனியாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து ஒரு பெண் அவளின் அருகில் வந்து,
“என்ன கோமதிம்மா இங்க பனியில உட்காந்திருக்கிங்க?” கேட்க அப்போது தான் அந்த பெண்மணியின் பெயர் கோமதி என்பது தெரிந்தது. இந்த பெயரை கேட்டதும் என் உடம்புக்குள் ஒரு வினாடி சில்லென்று ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு அடங்கியது..
மீண்டும் அவளோடு வருவேன்…